'கர்ப்பமாக இருந்தாலும் ஆக்‌ஷனில் அதிரடி காட்டும் தீபிகா” - 'ராக்கா' படத்தில் களமிறங்கும் 3 டூப் நடிகைகள்!

 

இயக்குநர் அட்லீ இயக்கத்தில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுமார் 800 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் 'ராக்கா'. இந்தியத் திரையுலகமே வியந்து பார்க்கும் வகையில் பிரமாண்டமாகத் தயாராகி வரும் இப்படத்தில், பாலிவுட் கனவுக்கன்னி தீபிகா படுகோனே மிக முக்கியமான மற்றும் வலிமையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது தீபிகா கர்ப்பமாக இருக்கும் நிலையிலும், படத்தின் திரைக்கதையில் அவருக்குரிய அதிரடி ஆக்ஷன் காட்சிகளைச் சற்றும் குறைக்க வேண்டாம் என இயக்குநர் அட்லீ அதிரடி முடிவெடுத்துள்ளார். இந்தத் தீர்மானத்தைச் செயல்படுத்தப் படக்குழுவினர் ஒரு மாஸ்டர் பிளானைப் போட்டுள்ளனர். தீபிகாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆக்‌ஷன் காட்சிகளைப் படமாக்க 'பாடி டபுள்' முறையைப் பயன்படுத்த உள்ளனர்.

இதற்காகத் தீபிகாவின் உடல்வாகு மற்றும் உயரத்திற்குப் பொருத்தமாக இருக்கும் வகையில் 3 'டூப்' நடிகைகளைத் தீவிரமாகத் தேடித் பிடித்துத் தேர்வு செய்துள்ளது படக்குழு. மிகவும் சவாலான சண்டைக் காட்சிகளில் இவர்கள் தீபிகாவிற்குப் பதிலாகத் திரையில் தோன்றுவார்கள்; அதே சமயம் நவீன கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தீபிகாவே நேரில் சண்டையிடுவது போன்ற தத்ரூபமான காட்சிகளை அட்லீ உருவாக்க உள்ளார்.

அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணி என்றாலே ஆக்‌ஷனுக்குப் பஞ்சம் இருக்காது என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், தற்போது தீபிகாவின் அதிரடி கதாபாத்திரமும் சேர்ந்துள்ளது ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆவலைப் பலமடங்கு அதிகரித்துள்ளது. கர்ப்பமாக இருந்தாலும் தனது சினிமா பணிகளில் சுறுசுறுப்பு காட்டும் தீபிகாவின் அர்ப்பணிப்பைக் கண்டு கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

ரூ.800 கோடி பட்ஜெட் என்பதால், ஒவ்வொரு காட்சியும் உலகத் தரத்தில் இருக்க வேண்டும் என்பதில் அட்லீ மிக உறுதியாக இருக்கிறார். இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய ஆக்ஷன் விருந்தாக 'ராக்கா' அமையும் என்பதில் சந்தேகமில்லை.