தீபிகா இரட்டை கோல்... ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை... இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

 

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்று வரும் 9-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டியில், மலேசியாவை 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நடப்பு சாம்பியனான இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் இந்திய அணி சீனாவை எதிர்கொள்ள உள்ளது.

நேற்றிரவு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், தொடக்கம் முதலே இந்திய அணி ஆக்ரோஷமாக விளையாடி மலேசியாவுக்குக் கடும் நெருக்கடி கொடுத்தது. இந்திய அணிக்காக மும்தாஜ் கான் 10-வது நிமிடத்திலும், நவ்நீத் கவுர் 18-வது நிமிடத்திலும் கோல் அடித்து முன்னிலை பெற்றுத் தந்தனர்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய தீபிகா 25 மற்றும் 30-வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து 33-வது நிமிடத்தில் சுனேலிதா டோப்போ மேலும் ஒரு கோல் அடித்தார்.

இதற்கிடையே மலேசிய அணி சார்பில் நூர் அசார் 27-வது நிமிடத்திலும், நூராமிரா சுல்கிப்லி 52-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். எனினும், ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் இந்தியாவின் இஷிகா கோல் அடித்து 6-2 என்ற கணக்கில் அணியின் அபார வெற்றியை உறுதி செய்தார்.

நடப்பு சாம்பியனான இந்திய அணி, இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த சீனாவை எதிர்கொண்டு மீண்டும் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்கும் முனைப்பில் களமிறங்க உள்ளது.