முதல்வர் விஜய் குறித்து அவதூறுப் பதிவு.. திமுக ஐ.டி. விங் நிர்வாகி கைது!

 

தமிழக முதலமைச்சர் விஜய் குறித்துச் சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும் அவதூறாகவும் கருத்துப் பதிவிட்டதாக, கரூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகியைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். எனினும், நீதிமன்றம் அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் முக்கிய நிர்வாகியான தங்கமணி (41) என்பவர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்துத் தவெக உள்ளூர் நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, நேற்று தங்கமணியைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தங்கமணி ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். மாற்றுத்திறனாளியான அவரைப் போலீசார் கைது செய்ததற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துக் குளித்தலை காவல் நிலையம் முன்பு திமுகவினர் பெருமளவில் திரண்டனர். இதனால் அங்கு தவெக மற்றும் திமுக தொண்டர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுப் பரபரப்பான சூழல் நிலவியது.

காவல் துறை விசாரணை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்கமணி குளித்தலை குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கினை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவரின் மாற்றுத்திறன் நிலை மற்றும் வழக்கின் தன்மையைக் கருத்தில் கொண்டு, தங்கமணிக்கு உடனடியாக ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து திமுகவினர் அவரைத் தங்களது வாகனத்தில் அழைத்துச் சென்றனர். முதலமைச்சர் குறித்த அவதூறு வழக்கில் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டு உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சம்பவம் கரூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.