டிகிரி போதும்.. ரூ.90,570 சம்பளத்தில் அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. அந்த வகையில், "ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு" மூலம் 461 பணியிடங்களை நிரப்புவதற்கான விரிவான அறிவிப்பாணையைத் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இணையவழியாக விண்ணப்பிப்பதற்கான செயல்முறைகள் தற்போது தொடங்கியுள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (நேர்காணல் அல்லாதவை) தேர்வு. பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள மொத்தம் 461 பணியிடங்கள் இத்தேர்வின் மூலம் நிரப்பப்படவுள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைத் பட்டம் பெற்றவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு குறித்த தளர்வுகள் அரசாணையின்படி பொருந்தும்.
தேர்வு செய்யப்படும் பணியிடங்களின் தர நிலைக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.28,480 முதல் அதிகபட்சம் ரூ.90,570 வரை ஊதியம் வழங்கப்படும். தகுதியுடைய நபர்கள் வரும் 25.06.2026 ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் பின்வரும் இரு முக்கியக் கட்டங்களின் அடிப்படையில் தகுதி வாரியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்:
கொள்குறி வகை வினாக்களைக் கொண்ட கணினி வழித் தேர்வு அல்லது தாள்கள் வடிவிலான எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இதில் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தாளும் அடங்கும். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு விதிகளின் (Reservation Rules) அடிப்படையில் தகுதிபெறும் நபர்களின் சான்றிதழ்கள் இணையவழியாகச் சரிபார்க்கப்பட்டு, இறுதிப் பணி நியமன ஆணை வழங்கப்படும். இப்பதவிகளுக்கு நேர்காணல் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnpsc.gov.in என்ற முகவரியின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஏற்கனவே ஒருமுறைப் பதிவு செய்யாதவர்கள், 150 ரூபாய் கட்டணம் செலுத்திப் பதிவை முடித்த பின்னரே விண்ணப்பப் படிவத்தை நிரப்ப முடியும். இத்தேர்வு குறித்த முழுமையான விவரங்கள், பாடத்திட்டங்கள் மற்றும் துறை வாரியான காலிப்பணியிடப் பிரிவுகளைத் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புப் பக்கத்தில் பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக் கொள்ளலாம்.