லக்னோவை வீழ்த்தி டெல்லி 'கெத்து'... 26 ரன்னுக்கு 4 விக்கெட் விழுந்தும் மீண்டது எப்படி?!

 

லக்னோவில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. லக்னோ அணியின் பேட்டிங் வரிசை டெல்லியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.

லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக ரிஷப் பண்ட் மற்றும் மிச்செல் மார்ஷ் களம் இறங்கினர். கேப்டன் ரிஷப் பண்ட் 7 ரன்களிலும், மிச்செல் மார்ஷ் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, அப்துல் சமத் மட்டும் ஓரளவுக்குப் போராடி 36 ரன்கள் சேர்த்தார்.

டெல்லி தரப்பில் தமிழக வீரர் நடராஜன் மற்றும் லுங்கி இங்கிடி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னோவின் முதுகெலும்பை உடைத்தனர். இதனால் லக்னோ அணி 18.4 ஓவரில் 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சியாக அமைந்தது. கேஎல் ராகுல் (0), பதும் நிசங்கா (1), நிதிஷ் ரானா (15), கேப்டன் அக்சர் பட்டேல் (0) என அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, டெல்லி அணி 4.3 ஓவரில் 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பிற்குச் சென்றது. இக்கட்டான நிலையில் இணைந்த சமீர் ரிஸ்வி மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி நிதானமாகவும், அதேசமயம் அதிரடியாகவும் ஆடியது. சமீர் ரிஸ்வி 47 பந்துகளில் 70 ரன்கள் குவித்து லக்னோ பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார்.

இறுதியில் டெல்லி அணி 17.1 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்டப்ஸ் 39 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். லக்னோ தரப்பில் பிரின்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.