உயர்நீதிமன்றத்தில் அதிர்ச்சி... ஆன்லைன் விசாரணையின் போது ஆபாச வீடியோ ஒளிபரப்பு!
டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஆன்லைன் விசாரணையின் போது, மர்ம நபர்கள் ஆபாச வீடியோக்களை ஒளிபரப்பி நீதிமன்ற நடவடிக்கைகளை முடக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் கரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தபோது இந்த அத்துமீறல் அரங்கேறியுள்ளது.
வழக்கு விசாரணை விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில், திடீரென திரையில் இரைச்சலான இசையுடன் ஆபாச வீடியோக்கள் தோன்றின. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாகத் தொடர்பைத் துண்டித்தனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் இணைப்பை ஏற்படுத்தியபோதும், அதே போன்ற வீடியோக்கள் ஒளிபரப்பானதுடன், "உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டது" என்ற எச்சரிக்கை செய்தியும் திரையில் தோன்றியது. இதனால் நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு, விசாரணை பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்த சைபர் தாக்குதல் குறித்து நீதிமன்ற நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், விசாரணையில் பங்கேற்ற மர்ம நபர் ஒருவர் தனது திரையைப் பகிர்ந்து (Screen Share) இந்த அருவருப்பான செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஸ்ரீதர் சர்னோபத் மற்றும் ஷித்ஜீத் சிங் ஆகிய பெயர்களில் இயங்கிய கணக்குகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். உயர்நீதிமன்ற விசாரணையிலேயே இது போன்ற பாதுகாப்பு மீறல் நடந்துள்ளது, டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.