டெல்லி ஹோட்டல் தீவிபத்து; குழந்தையுடன் 3வது மாடியிலிருந்து குதித்த இளம்பெண் - 21 பேர் பலி; உரிமையாளர் கைது!

 
டெல்லி தீ விபத்து 

டெல்லியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாகத் தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

தெற்கு டெல்லியின் மாள்வியா நகரில் உள்ள ஹவுஸ் ராணி பகுதியில், 'ப்ளரிஷ் ஸ்டே பி அண்டு பி' என்ற 6 மாடி தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் வெளிநாட்டினர் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர். மேலும், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்களும் இங்கு வாடகைக்கு வசித்து வந்தனர்.

நேற்று காலை சுமார் 8:45 மணியளவில், இந்த விடுதியின் உணவகத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களிலேயே நச்சுப் புகையுடன் கூடிய தீ, கட்டடம் முழுவதும் மளமளவெனப் பரவியது. இதனால் அறைகளில் தங்கியிருந்த முதியவர்கள் உள்ளிட்ட பலரால் உடனடியாக வெளியேற முடியாமல் உள்ளேயே மயங்கி விழுந்தனர்.

தீ விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் குதித்தனர். விடுதியின் அருகில் இருந்த மெத்தை கடைக்காரர்கள் சிலர், தங்களது கடைகளில் இருந்த மெத்தைகளை அவசர அவசரமாகக் கொண்டு சென்று விடுதியின் முன்புறம் தரையில் விரித்தனர். தீயின் பிடியிலிருந்து தப்பிக்க வேறு வழியில்லாததால், 4 மற்றும் 5-வது மாடிகளில் இருந்தவர்கள் கீழே குதித்தனர்.

அப்போது ஒரு தாய், தனது குழந்தையுடன் 3-வது மாடியிலிருந்து கீழே குதித்தார். நல்லவேளையாகப் பொதுமக்கள் விரித்திருந்த மெத்தைகளின் மீது அவர்கள் விழுந்ததால், லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் வந்த வீரர்கள், விடுதியில் சிக்கிய 60-க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், கடுமையான காயம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக 21 பேர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மத்திய ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் ஆவர். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 10-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த 6 மாடி தங்கும் விடுதியில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் ஒரே ஒரு குறுகிய வாசல் மட்டுமே இருந்ததே இத்தனை பெரிய உயிர்ச்சேதத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்து நடந்தவுடன் தலைமறைவான கட்டட உரிமையாளர் லாவ்கேஷ் பஜாஜ் என்பவரைத் தேடப் போலீசார் 'லுக் அவுட்' நோட்டீஸ் விடுத்திருந்தனர்.

இந்நிலையில், தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு உரிமையாளர் லாவ்கேஷ் பஜாஜ்ஜை டெல்லி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.50,000-மும் வழங்கப்படும் எனப் பிரதமர் அறிவித்துள்ளார். தீ விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.