டெல்லி மெட்ரோவில் திடீர் கட்டுப்பாடு! 11 நிலையங்கள் மூடல் - முழு லிஸ்ட் இதோ
டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் (DMRC) இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த கட்டுப்பாடு மறுஅறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும்.
இதன்படி ஜன்பத், படேல் சவுக், சென்ட்ரல் செக்ரட்டேரியட், ராஜீவ் சவுக், சேவா தீர்த், மண்டி ஹவுஸ், லோக் கல்யாண் மார்க், ஐ.என்.ஏ., சாவ்ரி பஜார், ராமகிருஷ்ணா ஆசிரம மார்க் மற்றும் நியூ டெல்லி ஆகிய 11 மெட்ரோ நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் வசதி மூடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ், நியூ டெல்லி மற்றும் சென்ட்ரல் செக்ரட்டேரியட் ஆகிய நிலையங்களில் மெட்ரோ ரயில் பாதைகளை மாற்றுவதற்கான ‘இன்டர்சேஞ்ச்’ வசதி தொடர்ந்து செயல்படும் என DMRC தெரிவித்துள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த போராட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி வழங்கவில்லை.
போராட்டத்தை முன்னிட்டு ஜந்தர் மந்தர் மற்றும் மத்திய டெல்லியின் முக்கிய பகுதிகளில் போலீசார் மற்றும் மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார் 3,000 முதல் 4,000 பேர் வரை போராட்டத்தில் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மத்திய டெல்லி பகுதியில் போக்குவரத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாக பயணம் செய்யும் பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.