டெல்லி ஜவுளிக்கடை உடைமாற்றும் அறையில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை...  ஆண் நண்பர் பரபரப்பு வாக்குமூலம் !

 

 

டெல்லியில் ஜவுளிக்கடையின் உடைமாற்றும் அறையில் இளம்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக அவரது ஆண் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லி மோதி நகர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள ஜவுளிக்கடையில் ஷப்னம் (18) என்ற இளம்பெண் வேலை செய்து வந்தார். கடந்த சனிக்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட தயாரானபோது, அங்கு வந்த சூரஜ் என்ற இளைஞர் அவரை சந்தித்துள்ளார்.

பின்னர் இருவரும் கடையின் உடைமாற்றும் அறைக்குள் சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் சூரஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதையடுத்து கடை ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, ஷப்னம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய சூரஜை கைது செய்தனர். ஷப்னம் மற்றும் சூரஜ் இடையே ஏற்கனவே பழக்கம் இருந்ததாகவும், பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.