டெல்லிக்குள் பழைய வாகனங்களுக்கு கட்டுப்பாடு! எல்லைகளில் போலீசார் தீவிர சோதனை!

 

 

டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நவம்பர் 1 முதல் புதிய வாகன நுழைவுக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து டெல்லி எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருத்தப்பட்ட காற்று மாசு தடுப்பு நடவடிக்கை திட்டத்தின் (GRAP) கீழ் இந்தக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு BS-VI தரத்திலான பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள், CNG வாகனங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்கள் டெல்லிக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

allowfullscreen

BS-VI தரத்துக்குக் கீழான வாகனங்கள், செல்லுபடியாகும் மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (PUCC) இல்லாத வாகனங்கள், விதிகளுக்கு இணங்காத வெளிமாநிலப் பேருந்துகள் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்லிக்குள் செல்ல வேண்டிய அவசியமில்லாத சரக்கு லாரிகள் சுற்றுவட்டச் சாலைகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன.

வாகனங்களின் தகுதி, பதிவுச் சான்று மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். விதிகளை மீறும் வாகனங்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். இந்த வாகனக் கட்டுப்பாடுகள் ஜனவரி 31, 2027 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குளிர்கால காற்று மாசுபாட்டை எதிர்கொள்ள டெல்லியில் அலுவலகப் பணியாளர்களுக்கு 50 சதவீதம் வீட்டிலிருந்து பணிபுரியும் நடைமுறை, கட்டுமானப் பணிகளுக்கான கட்டுப்பாடுகள், வாகன நிறுத்தக் கட்டண உயர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.