டெல்லி போராட்டம்: மாணவர்களுக்கு Swiggy, Zomato மூலம் குவியும் உணவுகள்!
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு, ஆன்லைன் உணவு விநியோகச் செயலிகள் மூலம் விதவிதமான உணவுகளும் அத்தியாவசியப் பொருட்களும் தொடர்ந்து வந்து குவிந்து வருகின்றன.
மாணவர்களின் நியாயமான போராட்டத்திற்கு நாடு முழுவதிலும் உள்ள பொதுமக்கள் தங்களது ஆதரவை வினோதமான அதேசமயம் நெகிழ்ச்சியான வழியில் தெரிவித்து வருகின்றனர்.
Swiggy மற்றும் Zomato போன்ற செயலிகள் வாயிலாக உணவுகள், குடிநீர் பாட்டில்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் நேரடியாகப் போராட்டம் நடைபெறும் ஜந்தர் மந்தர் முகவரிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த உணவுகளை யார் ஆர்டர் செய்து அனுப்புகிறார்கள் என்ற விபரம் டெலிவரி ஏஜென்ட்களுக்கும் தெரியவில்லை. முகவரியை மட்டும் வைத்துக்கொண்டு தொடர்ந்து உணவுப் பொட்டலங்கள் வந்து சேர்கின்றன.
நாடு தழுவிய அளவில் தங்களுக்குக் கிடைத்து வரும் இந்த எதிர்பாராத ஆதரவு குறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்களுக்கு உணவு அனுப்பும் அடையாளம் தெரியாத நல்நெஞ்சங்களுக்கு நன்றி தெரிவித்து மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
மாணவர்களின் இந்த அறப்போராட்டத்திற்கு அலைகடலெனத் திரண்டு வரும் ஆதரவும் அன்பும் களத்தில் போராடி வருபவர்களுக்குப் பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.