"டெல்லி மாணவர்கள் போராட்டம்... ஒரு தலைமுறையின் ஒட்டுமொத்த கோபம்” - இயக்குநர் பா.ரஞ்சித் ஆதரவு!

 

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் பதவி விலகக்கோரி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தடியடிக்கு பிரபலத் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி சென்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் குறித்து அவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

மாணவர்களின் போராட்டம் மற்றும் அரசின் நடவடிக்கை குறித்து இயக்குநர் பா.ரஞ்சித், "கல்வித் துறையில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராக ஜனநாயக வழியில் அமைதியாகப் போராடிய மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை, அரசின் பதிலற்ற தன்மையையும் பொறுப்பற்ற போக்கையுமே அம்பலப்படுத்துகிறது" எனச் சாடியுள்ளார்.

டெல்லியில் வெடித்துள்ள இந்த மாணவர் போராட்டம் என்பது வெறும் தற்காலிக எதிர்ப்பல்ல; மாறாக, இது உடைந்த வாக்குறுதிகளாலும், கல்வி அமைப்பில் நிலவும் குளறுபடிகளாலும் பாதிக்கப்பட்ட 'ஒரு தலைமுறையின் ஒட்டுமொத்தக் கோபம்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வில் வெளிப்படைத்தன்மை வேண்டி போராடும் மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்றும், அடக்குமுறைகளை நிறுத்திவிட்டு உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.