கொடைக்கானலில் அதிகரிக்கும் போதைக் காளான் விற்பனை - நடவடிக்கையைத் தீவிரப்படுத்த கோரிக்கை!
'மலைகளின் இளவரசி' என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானலில், சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து 'மேஜிக் மஸ்ரூம்' எனப்படும் போதைக் காளான் விற்பனை அதிகரித்து வருவது பொதுமக்களிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
காவல் துறையிடம் சிக்காமல் இருக்கப் போதைப்பொருள் கடத்தல் கும்பல் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதளப் பக்கங்களை விற்பனைக்கான முதன்மைத் தளமாகப் பயன்படுத்தி வருகிறது. போதைக் காளான்களை வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் பரப்பி, அதைத் தொடர்பு கொள்ளும் சுற்றுலாப் பயணிகளை ரகசிய இடங்களுக்கு வரவழைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
கொடைக்கானலில் சட்டவிரோதமாகச் செயல்படும் சில தனியார் விடுதிகளிலேயே சுற்றுலாப் பயணிகளுக்குப் போதைக் காளான், போதை மாத்திரைகள், போதை ஸ்டாம்புகள் மற்றும் போதை சாக்லேட்டுகள் போன்றவை நேரடியாக விற்பனை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தனியாக வரும் சுற்றுலாப் பயணிகளைப் போதைப்பொருள் கும்பல் மிரட்டி, அவர்களிடமிருக்கும் பணம் மற்றும் நகைகளைப் பறிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. சட்டவிரோதப் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் தனியார் தங்கும் விடுதிகளைக் கண்டறிந்து, அவற்றிற்குக் காவல் துறை சார்பில் சீல் வைக்கப்பட்டு வருகிறது.
கொடைக்கானல் காவல் துறையினர் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், "போதைக் காளான் உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களை ரகசியமாகக் கண்காணித்துக் கைது செய்து வருகிறோம். போதைப்பொருள் விநியோகத்தைத் தடுக்க இணையதளங்கள் மற்றும் சுற்றுலாத் தொடர்பிலுள்ள சமூக வலைதளக் கணக்குகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருட்களால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்துக் கொடைக்கானல் மலைக்கிராம மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுலா நகரமான கொடைக்கானல் தனது அமைதியான அடையாளத்தை இழந்து போதை நகரமாக மாறுவதைத் தடுக்க, மாநில அரசும் காவல் துறையும் கடத்தல் கும்பல் மீது மேலும் கடுமையான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வலுத்து வருகிறது.