மார்ச் 19ல் 'ஜனநாயகன்' ரிலீஸ்... இன்று ரிவைசிங் கமிட்டி மறுதணிக்கை!
தமிழக வெற்றிக் கழகத்தின்தலைவர் விஜய் நடிப்பில், இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீடு மார்ச் 19ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அரசியல் களத்தில் விஜய் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அவரது கடைசித் திரைப்படமாகக் கருதப்படும் 'ஜனநாயகன்' படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இருப்பினும், படத்தின் சென்சார் சான்றிதழ் பெறுவதில் சில சிக்கல்கள் நீடித்து வருகின்றன.
படத்தில் இடம்பெற்றுள்ள சில அரசியல் வசனங்கள் மற்றும் காட்சிகள் காரணமாகச் சென்சார் வாரியம் சான்றிதழ் வழங்கக் கூடுதல் நிபந்தனைகளை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று ரிவைசிங் கமிட்டி இப்படத்தைப் பார்வையிட்டு மறுதணிக்கை செய்ய உள்ளது. இதில் படக்குழு அளிக்கும் விளக்கங்கள் மற்றும் அவர்கள் செய்யும் மாற்றங்களைப் பொறுத்துச் சான்றிதழ் வழங்கப்படும்.
சென்சார் சான்றிதழ் மார்ச் 15-ஆம் தேதிக்குள் கிடைத்துவிட்டால், வரும் மார்ச் 19-ஆம் தேதி (வியாழக்கிழமை) படத்தை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப் படக்குழுத் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், இப்படத்தில் உள்ள அரசியல் கருத்துக்கள் தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக இருக்கிறதா என்பதைத் தணிக்கைக் குழு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.