முதல்வர் பிறந்தநாள் அன்று 'ஜனநாயகன்' வெளியீடு: அமைச்சர் பேச்சு

 

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் துவக்க விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், தவெக தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான ஜோசப் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் குறித்துப் பேசிய கருத்துக்கள் தற்பொழுது சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

அதிமுக, திமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகளுக்கிடையே தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தணிக்கை சான்றிதழ் சிக்கல்களால் தள்ளிப் போய்க் கொண்டிருக்கும் விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' படம், அவரது பிறந்தநாளான ஜூன் 22-ஆம் தேதியை முன்னிட்டுத் திரைக்கு வரலாம் எனத் தகவல் பரவி வருகிறது.

இது குறித்து விழாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், "தமிழகத்தில் எந்தவொரு திரைப்படமாக இருந்தாலும், அது மத்திய தணிக்கை வாரியத்தின் உரிய தணிக்கை சான்றிதழைப் பெற்று, சட்ட விதிகளுக்கு உட்பட்டு முறைப்படிதான் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. 'ஜனநாயகன்' படத்திற்கும் அதுவே பொருந்தும்.

நேற்று அவர் வெறும் நடிகர் விஜய் மட்டும் தான். ஆனால் இன்று, மக்களின் வாக்குகளைப் பெற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்று இந்த மாநிலத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அவரது வளர்ச்சி வியக்கத்தக்கது."

"நேற்று நடிகராக இருந்து இன்று முதலமைச்சராக உயர்ந்திருக்கும் விஜய், நாளை எங்கு இருப்பார் என்பது அவர் கையிலோ அல்லது எங்களது கையிலோ இல்லை. காலம் என்ன தீர்ப்பு எழுதப் போகிறது, தமிழக மக்கள் அடுத்தடுத்து என்ன மாதிரியான தீர்ப்புகளைத் தரப் போகிறார்கள் என்பதை நாம் அனைவரும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார்.