தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு.. தினந்தோறும் 100 பேருக்கு பாதிப்பு - பொதுமக்கள் முகக்கவசம் அணிய அமைச்சர் அறிவுறுத்தல்!

 

தமிழகத்தில் காலநிலை மாற்றம் காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், காலநிலை மாற்றத்தால் கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து, தினசரி 100 பேர் வரை டெங்குவினால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், கடந்த திங்கள்கிழமை மட்டும் 79 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த ஆண்டு இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெங்குவைக் கட்டுப்படுத்தவும், சிகிச்சையளிக்கவும் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளுக்குக் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.