டெங்கு காய்ச்சல் எதிரொலி - அண்ணா பல்கலைக்கழக விடுதிகளில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக மருத்துவ முகாம்கள்!

 

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் பரவிவரும் டெங்கு காய்ச்சல் குறித்த வதரிகளுக்கு நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதோடு, காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக விடுதிகளில் தீவிர முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அண்ணா பல்கலைக்கழகத்தில் டெங்கு காய்ச்சலால் மூன்று மாணவர்கள் உயிரிழந்ததாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால், இந்தத் தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம், டெங்கு பாதிப்பால் ஒரு மாணவர் மட்டுமே உயிரிழந்தார் என்றும், மூன்று பேர் பலியானதாகப் பரவும் செய்தி முற்றிலும் வதந்தி என்றும் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் காய்ச்சல் பரவலைத் தடுக்கும் விதமாகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, அங்குள்ள மாணவ மற்றும் மாணவியர் விடுதிகளில் தனித்தனியாகச் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த முகாம்களில் விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவ, மாணவியருக்கும் காய்ச்சல் மற்றும் உடல்நலப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, தேவையான மருத்துவ ஆலோசனைகளும் பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகின்றன.