சென்னையில் வேகமெடுக்கும் டெங்குப் பரவல்.. தடுப்புப் பணியில் 3,597 ஊழியர்கள்!

 

சென்னையில் பருவமழை காலத்தையொட்டி டெங்கு மற்றும் பிற காய்ச்சல் பரவலைத் தடுக்கும் பொருட்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முழு வீச்சில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னைப் மாநகராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள மொத்தம் 3,597 பணியாளர்கள் களத்தில் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், பள்ளிகள் மற்றும் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு நேரில் செல்லும் ஊழியர்கள், பொதுமக்களுக்குத் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

பொதுமக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு சென்னையில் மொத்தம் 48 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் மூலமாக இதுவரை 1,108 பொதுமக்கள் பயனடைந்து உரிய மருத்துவச் சிகிச்சைகளையும் ஆலோசனைகளையும் பெற்றுள்ளனர்.