சென்னையில் கடும் புகைமூட்டம்... தரையிறங்க முடியாமல் தவித்த 11 விமானம்... பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்ட இண்டிகோ விமானம்!
தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் புகை காரணமாகச் சென்னை மாநகரம் முழுவதும் கடுமையான அடர் புகைமூட்டம் சூழ்ந்தது. இதனால் பார்வைத் திறன் குறைந்ததை அடுத்து, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 11 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.
தமிழகம் முழுவதும் தீபாவளிப் பண்டிகை நேற்று மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இரவு நேரத்தில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் பெருமளவிலான பட்டாசுகளை வெடித்துத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சென்னை நகரம் முழுவதுமே அடர்ந்த புகைமூட்டமாகக் காட்சி அளித்ததால், எதிரே வரும் சாலைகள் கூடத் தெரியாத அளவுக்குப் பார்வைத் திறன் கடுமையாகக் குறைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாகச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.
பட்டாசுப் புகையால் உலகளவில் அதிகக் காற்று மாசு பதிவான முக்கிய நகரங்களின் பட்டியலில் சென்னை இடம் பிடிக்கும் அளவுக்கு மாசின் அளவு அபாயகரமாக உயர்ந்தது. சென்னையில் நிலவிய இந்தக் கடுமையான புகைமூட்டம் மற்றும் குறைந்த பார்வைத் திறன் காரணமாக மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது.
சென்னைக்கு வந்த 11 விமானங்கள் தரையிறங்குவதற்கான சாதகமான சூழல் இல்லாததால், மீனம்பாக்கம் வான்வெளியில் நீண்ட நேரமாக வட்டமடித்துப் பின்னரே தாமதமாகத் தரையிறங்கின. அதேபோன்று, சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்குப் புறப்பட வேண்டிய 15 விமானங்கள் புறப்பாடவதில் தாமதம் ஏற்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து 156 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த இண்டிகோ விமானம், சென்னை வான்வெளியில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதால், உடனடியாகப் பெங்களூரு விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது. தற்போது சென்னை வான்வெளியில் நிலவிய காற்று மாசு மற்றும் புகைமூட்டம் படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, விமானச் சேவைகள் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.