குழந்தைகள் பல் மருத்துவமனையில் பாலியல் அத்துமீறல் ... எக்ஸ்-ரே ஊழியருக்கு 40 ஆண்டுகள் சிறை!

 

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள குழந்தைகள் பல் மருத்துவமனையில் டெலோன் கார்சியா என்பவர் எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வந்துள்ளார். இவர் சிகிச்சைக்காகக் கொண்டு வரப்படும் 4 முதல் 6 வயதுடைய சிறு குழந்தைகளைப் பல் பரிசோதனை எனக் கூறித் தனி அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மயக்க நிலையில் இருந்த பச்சைக் குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி கொடூரத் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட அந்த அருவருப்பான அத்துமீறல்களைத் தனது கைபேசியில் ஆபாசப் புகைப்படங்களாகவும் எடுத்து  வைத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமியின் பெற்றோர் சந்தேகமடைந்து அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் உடனடி விசாரணையைத் தொடங்கினர். காவல் துறையின் தடயவியல் நிபுணர்கள் டெலோன் கார்சியாவின் கைபேசியைக் கைப்பற்றித் தீவிரமாகப் பரிசோதனை செய்துள்ளனர். அந்த ஆய்வில் குழந்தைகள் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டதை உறுதிப்படுத்தும் அதிர்ச்சி புகைப்படங்கள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த வழக்கில் மொத்தம் 3 சிறு குழந்தைகள் இவரால் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற போது டெலோன் கார்சியா தான் செய்த கொடூரக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். குழந்தைகள் மற்றும் பெற்றோர் வைத்திருந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்திப் பாதுகாப்பு விதிகளை மீறியதாக நீதிபதி சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து குற்றவாளியான டெலோன் கார்சியாவுக்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.