துணை சபாநாயகர், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.-வுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை!

 

மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், துணை சபாநாயகர் ரவிசங்கர் மற்றும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆகியோருக்கு முதலமைச்சர் விஜய் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் நிறைவில், கட்சித் தலைவரும் முதலமைச்சருமான விஜய், குறிப்பிட்ட சில நிர்வாகிகளுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினார். அந்த வகையில், சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆகியோரை முதலமைச்சர் விஜய் கடைசியாக அழைத்துப் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின் போது, அவர்கள் இருவரின் சமீபத்திய செயல்பாடுகள் தொடர்பாகத் தமது அதிருப்தியை முதலமைச்சர் விஜய் நேரடியாக வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் செயல்பாடுகள் மக்களிடையே கட்சியின் நற்பெயரை உயர்த்தும் வகையில் இருக்க வேண்டுமே தவிர, எதிர்மறையான விமர்சனங்களுக்கு இடமளிக்கக் கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

"கட்சிக்கும் ஆட்சிக்கும் களங்கம் ஏற்படும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது" என துணை சபாநாயகர் ரவிசங்கர் மற்றும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆகியோரை முதலமைச்சர் விஜய் கண்டிப்புடன் எச்சரித்து அனுப்பியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே சில சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான புகார்கள் குறித்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், மாமல்லபுரம் கூட்டத்தில் முதலமைச்சர் விடுத்துள்ள இந்த எச்சரிக்கை தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.