இன்ஸ்டாவுல 14,00,000 ஃபாலோயர்கள் இருந்தும் பஞ்சாயத்து தேர்தலில் வெறும் 33 வாக்குகள் பெற்று தோல்வியடைந்த பிரபலம்!

 

சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் (Followers) இருந்தால் தேர்தலில் எளிதாக வென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் போட்டியிட்ட பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸர் ஒருவர், கிராம பஞ்சாயத்து தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் பிஷ்னோய். இவர் இன்ஸ்டாகிராம் தளத்தில் 1.4 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்டு பிரபலமான இணையப் பிரமுகராக வலம் வருகிறார். தனது இணையவழிச் செல்வாக்கை நம்பி, அவர் தனது சொந்த ஊரில் நடைபெற்ற உள்ளூர் கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டார்.

தேர்தல் களத்தில் நேரடியாக மக்களைச் சந்திப்பதை விட, தனது சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாகவும், ரீல்ஸ்கள் மூலமாகவும் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

தேர்தல் முடிவுகள் வெளியானபோது அவருக்குப் பலத்த அதிர்ச்சி காத்திருந்தது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அவருக்கு மொத்தம் 33 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. பதிவான அந்த 33 வாக்குகளும் கூட அவரது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் சொந்த நண்பர்கள் போட்ட வாக்குகள் மட்டுமே என்பது தெரியவந்தது.

சமூக வலைதளங்களில் கிடைக்கும் 'லைக்குகளும்', 'ஃபாலோயர்களும்' ஒருபோதும் நிஜ உலகத் தேர்தலின் 'வாக்குகளாக' மாறாது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.