திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயில் குகையில் சிக்கி பக்தர் மூச்சுத்திணறி பலி!
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள புகழ்பெற்ற இடுக்கு பிள்ளையார் கோயில் குகை போன்ற பகுதியில் சிக்கி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர், மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்: இக்கோயிலில் மிகச் சிறிய குகை போன்ற அமைப்பில் 3 வாசல்கள் உள்ளன. பக்தர்கள் பின்வாசல் வழியாகப் படுத்தவாறு உள்ளே நுழைந்து, கைகளை ஊன்றி மெல்ல நகர்ந்து முன்வாசல் வழியாக வெளியே வந்து நந்தியையும் இடுக்கு பிள்ளையாரையும் வழிபடுவது வழக்கமாக உள்ளது.
கிரிவலம் வரும் பெரும்பாலான பக்தர்கள் தங்கள் பாவங்கள் நீங்குவதாக நம்பி நீண்ட வரிசையில் நின்று இந்தக் குறுகிய குகைப் பாதையைக் கடந்து சொல்வார்கள். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மணிக்குமார் (36) என்பவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்துள்ளார். இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு வந்த மணிக்குமார், குகை போன்ற குறுகிய பகுதிக்குள் படுத்தபடி நுழைய முயன்றுள்ளார். ஆனால், அவரது உடல் பருமன் அதிகமாக இருந்ததால் குகையின் நடுவே நசுங்கி வெளியே வர முடியாமல் தவித்துள்ளார்.
குறுகிய இடத்திற்குள் நீண்ட நேரம் சிக்கிக் கொண்டதால் அவருக்குக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பக்தர்கள் பெரும் போராட்டத்திற்குப் பிறகு அவரை குகையிலிருந்து வெளியே மீட்டனர்: உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மணிக்குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துத் திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையப் போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவாமி தரிசனம் செய்ய வந்த இடத்தில் பக்தர் ஒருவர் குகைக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம் திருவண்ணாமலைக்கு வந்த பக்தர்கள் இடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.