பொன்னேரியில் தேர் கவிழ்ந்து விபத்து - நூலிழையில் உயிர் தப்பிய பக்தர்!
தமிழகம் முழுவதும் பங்குனிப் பெருவிழா ஆலயங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள புகழ்பெற்ற திருப்பாலீஸ்வரர் திருக்கோயில் பங்குனி பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின் போது, தேர் நிலைதடுமாறி கவிழ்ந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக இதில் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
திருப்பாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத பிரமோற்சவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் 'அரோகரா' முழக்கத்துடன் வீதி உலா இழுத்துச் சென்றனர். அப்போது ஒரு வளைவில் திரும்ப முற்பட்டபோது, எதிர்பாராத விதமாகத் தேர் ஒரு பக்கமாகச் சரிந்து தரையில் கவிழ்ந்தது. அந்தச் சமயத்தில் தேரில் அமர்ந்திருந்த அரவிந்தன் என்ற வாலிபர் தேர் கவிழ்வதைக் கண்டு சாமர்த்தியமாகக் குதித்தார். இதில் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
தேர் கவிழ்ந்ததைக் கண்டு அருகில் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். நல்ல வாய்ப்பாகத் தேர் கவிழ்ந்த திசையில் பக்தர்கள் யாரும் சிக்காததால் மிகப்பெரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் தேரோட்டம் நிறுத்தப்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்த வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கிரேன் உதவியுடன் கவிழ்ந்த தேரை மீண்டும் நிமிர்த்தும் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டன. கோயில் நிர்வாகத்தின் முறையான பராமரிப்பு இன்மை அல்லது வீதியின் தரைத்தளம் சமமாக இல்லாததே விபத்திற்குக் காரணம் எனப் பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது.