குவிந்த பக்தர்கள்... ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

 

தமிழ் ஆடி மாதம் மற்றும் மலையாள கர்கிடக மாதப் பிறப்பை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைகளுக்காக நேற்றைய தினம் மாலை 5 மணிக்குத் திறக்கப்பட்டது.

சபரிமலை கோவில் தந்திரியான கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி முறைப்படி நடையைத் திறந்து வைத்து தீபாராதனை காட்டினார். நடை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்திருந்த ஐயப்ப பக்தர்கள் 'சுவாமியே சரணம் ஐயப்பா' என்ற சரண கோஷத்துடன் சாமி தரிசனம் செய்யத் தொடங்கினர்.

இன்று ஜூலை 17, வெள்ளிக்கிழமை) முதல் வரும் ஜூலை 21-ஆம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்களுக்குச் சபரிமலையில் வழக்கமான மாத பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. இந்த ஐந்து நாட்களிலும் வழக்கமான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, படி பூஜை மற்றும் புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட அனைத்து விதமான சிறப்பு வழிபாடுகளும் தடையின்றி நடைபெறும்.

மாதாந்திர பூஜைகளில் பங்கேற்றுச் சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ஆன்லைன் முன்பதிவு (Online Booking) தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஐந்து நாட்கள் பூஜைகள் அனைத்தும் நிறைவடைந்த பின், வரும் ஜூலை 21-ஆம் தேதி இரவு ஹரிவராசனம் பாடி கோவில் நடை முறைப்படி சாத்தப்படும் எனத் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.