கொந்தளித்த பக்தர்கள்... திருவண்ணாமலை கோயிலில் நந்தி மீது ஷூவுடன் ஏறி நின்று சுத்தம் செய்த தீயணைப்பு வீரர்கள்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கோபுரங்களைச் சுத்தம் செய்யும் பணியின் போது, சிவபெருமானின் தங்க ரிஷப வாகனத்தின் மீது தீயணைப்பு வீரர்கள் ஷூ கால்களுடன் ஏறி நின்று தண்ணீரைப் பீய்ச்சி அடித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் வரும் நவம்பர் 15-ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் விழாவின் சிகர நிகழ்ச்சியாக, வரும் 24-ஆம் தேதி 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதனையொட்டி, திருக்கோயிலின் 9 ராஜகோபுரங்களையும் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
கடந்த நவம்பர் 3-ம் தேதி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேலு தலைமையில், திருவண்ணாமலை தீயணைப்பு அலுவலர் பழனிச்சாமி மேற்பார்வையில் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கோபுரங்களைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில், தீயணைப்பு வாகனத்தில் உள்ள ஹைட்ராலிக் ஏணியைப் பயன்படுத்தாமல், சுவாமி வீதி உலா வரும் புனிதமான தங்க ரிஷப (நந்தி) வாகனத்தைக் கோயிலில் இருந்து இழுத்து வந்து நிறுத்தினர்.
பின்னர், புனிதமாகக் கருதப்படும் அந்த தங்க ரிஷப வாகனத்தின் மீது தீயணைப்பு வீரர்கள் ஷூ மற்றும் செருப்புகளுடன் ஏறி நின்று கோபுரத்தின் மீது தண்ணீரைப் பீய்ச்சியுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவத்தைச் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட, அது வைரலாகி பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சிவபெருமானின் வாகனமான நந்தி, தர்மத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவின் 5-ஆம் நாள் வீதி உலாவின் போது, அண்ணாமலையார் இந்தத் தங்க ரிஷப வாகனத்திலும், உண்ணாமுலையம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
கோயில் ஆகம விதிகளின்படி, இறைவனின் வாகனங்கள் தெய்வத்திற்குச் சமமாகக் கருதப்படுபவை. சுத்தமான வஸ்திரம் அணிந்து, நீராடிய பின்னரே அவற்றைத் தொட வேண்டும். அப்படிப்பட்ட புனிதமான வாகனத்தை வெறும் மரச்சாமானாகப் பயன்படுத்தி, அதன் மீது ஷூவுடன் ஏறி நின்றது மகா பாவம் மற்றும் தீட்டு எனக் கூறிப் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.
பக்தர்களின் எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது. தீயணைப்பு வீரர்களுக்குத் தங்க ரிஷப வாகனத்தை எடுத்துக் கொடுத்ததாகக் கூறப்படும் கோயில் ஊழியர் அசோக் என்பவரைப் பணி இடைநீக்கம் செய்து கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி கோயில் நிர்வாகத்திடம் முறைப்படி மன்னிப்புக் கடிதம் அளித்துள்ளார். அதில், "திருமஞ்சன கோபுரத்தில் புறா எச்சம் பசை போல ஒட்டிக் கொண்டிருந்ததால், தரையில் இருந்து சுத்தம் செய்ய முடியவில்லை. இதனால் ரிஷப வாகனத்தின் மீது ஏறி நின்று சுத்தம் செய்தது தவறுதான்; இனி இதுபோன்ற தவறுகள் ஒருபோதும் நடக்காது" எனக் குறிப்பிட்டுள்ளார்.