அதிகாலையில் குவிந்த பக்தர்கள்... திருவண்ணாமலை தீபத்திருவிழா தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது - நவ.24ல் மலை மீது மகா தீபம்!

 

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகப் போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், புகழ்பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வரும் 24-ஆம் தேதி மலை மீது ஏற்றப்பட உள்ளது. சிவபெருமான் ஜோதிப் பிழம்பாக எழுந்தருளியதைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் இத்திருவிழா இன்று காலை தொடங்குகிறது.

இன்று காலை 6:05 மணி முதல் 7:35 மணிக்குள் அண்ணாமலையார் கோயிலின் 3-ஆம் பிரகாரத்தில் அமைந்துள்ள 63 அடி உயரத் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.  தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இத்தீபத்திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பத்தாம் திருநாளான வரும் நவம்பர் 24-ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். இந்த மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் ஒளிரும். மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்திற்காகத் தரமான நெய் மற்றும் திரிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மகா தீபம் ஏற்றுவதற்காக ஆவின் நிறுவனத்திடம் இருந்து 15 கிலோ எடையுள்ள 300 டின்களில், மொத்தம் 4,500 கிலோ அக்மார்க் தூய நெய் ரூ.39 லட்சம் மதிப்பில் கோயில் நிர்வாகத்தால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெய் கோயில் மடப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் தீபத்திற்காக நெய் காணிக்கையாகப் பணத்தையோ அல்லது நேரிடையாக நெய்யையோ செலுத்தக் கோயில் நிர்வாகம் சார்பில் 3-ஆம் பிரகாரத்தில் சிறப்புப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் ரொக்கமாகவோ அல்லது கூகுள் பே போன்ற ஆன்லைன் சேவைகள் மூலமாகவோ நெய் காணிக்கையைச் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.