திருவண்ணாமலையில் கடலென குவிந்த பக்தர்கள்... இன்று மாலை 2,668 அடி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது!

 

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் இன்று நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு, கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. இவ்விழாவில் சுமார் 50 இலட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கோயில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களால் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய கார்த்திகை தீபத் திருவிழாவின் 10-ஆம் நாளான இன்று, அதிகாலை 4 மணிக்குக் கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.

மகா தீபத்திற்குப் பயன்படுத்தப்படும் பிரத்யேகத் தீபக் கொப்பரைக்கு நேற்று காலை 5.30 மணியளவில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள சின்ன நந்தி அருகே சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், பக்தர்கள் மூலம் தீபக் கொப்பரை மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் 4,500 லிட்டர் நெய் மற்றும் திரிக்கான காடா துணிகளும் மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

திருவிழாவின் 9-ஆம் நாளான நேற்று காலை 11 மணியளவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், அம்பாளுடன் சந்திரசேகரர் புருஷா முனி வாகனத்திலும் மேளதாளங்கள் முழங்க மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வீடுகளின் அருகே சுவாமி வந்தபோது பக்தர்கள் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

நேற்று இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாச்சலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் கைலாச வாகனம் மற்றும் காமதேனு வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்தனர்.

மகா தீபத் திருநாளையொட்டி அருணாச்சலேஸ்வரர் கோயில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களால் கண்கவர் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகப் பக்தர்களைக் கவரும் விதமாக வண்ண மலர்களைக் கொண்டே நடராஜர் மற்றும் சிவலிங்கம் ஆகிய உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், சமயக் குரவர்களான மாணிக்கவாசகர், சுந்தரர், திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோரின் திருவுருவப் படங்களுடன் கூடிய சிறப்பான மலர் அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது.

மகா தீபத்தைத் தரிசிப்பதற்காகத் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். நேற்றைய தினம் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.