601 கிலோ லட்டுகளால் பிரம்மாண்ட விநாயகர் சிலை - பக்தர்கள் ஆர்முடன் தரிசனம்!
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நூற்றுக்கணக்கான கிலோ எடையுள்ள லட்டுகளைக் கொண்டு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட விநாயகர் சிலை பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை மீனாட்சி அம்மன் தெருவில் அமைந்துள்ள சிவசக்தி விநாயகர் கோயிலில் பொதுமக்கள் சார்பில் இந்தச் சிறப்பு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் விநாயகர் சதுர்த்தியைச் சிறப்பிக்கும் வகையில் மொத்தம் 601 கிலோ எடையிலான லட்டுகளைக் கொண்டு இந்த விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
சிவசக்தி அம்மன், விநாயகருக்கு அன்னம் ஊட்டுவது போன்ற மிக அற்புதமான கலைநயத்துடன் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த லட்டு விநாயகரை அப்பகுதி மக்கள் மற்றும் திரளான பக்தர்கள் நேரில் வந்து ஆர்வத்துடன் கண்டு தரிசித்து வருகின்றனர்.