“ஆபாசமாக ஆடையணிந்து ராக்கி கட்டிய தனுஷ் பட நடிகை” - சர்ச்சை வீடியோவுக்கு விளக்கம்!
ரக்ஷாபந்தன் என்பது சகோதரத்துவத்தைக் கொண்டாடுவது. இந்நிலையில், பிரபல ஜிவா நகை பிராண்டின் ரக்ஷாபந்தன் விளம்பரத்தில் நடிகை கிருதி சனோனின் ஆடை அலங்காரம் மற்றும் அவரது செல்ல நாய்குட்டிக்கு ராக்கி கட்டிய காட்சி ஆகியவை சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி கடும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், அதற்கு கிருதி சனோன் விளக்கம் அளித்துள்ளார்.
விளம்பரத்தில் கிருதி பிராலெட் வகை ரவிக்கை, கேப் மற்றும் மடிப்புப் பாவாடை கொண்ட நவீன உடையில் தோன்றி ரக்ஷா பந்தன் கொண்டாடுகிறார். பாரம்பரிய குடும்ப விழாவிற்கு இந்த ஆடை பொருத்தமற்றது எனக் கூறி சிலர் விமர்சித்தனர். குடும்பக் கொண்டாட்டத்தின் போது தனது செல்ல நாய்க்கு அவர் ராக்கி கட்டும் காட்சியும் விளம்பரத்தில் இடம்பெற்றது. இது பண்டிகையின் மரபை மீறும் செயல் என இணையத்தில் சிலர் கேள்வி எழுப்பினர்.
பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத், இந்த விளம்பரத்தை "வேண்டுமென்றே செய்யப்பட்ட அருவருக்கத்தக்க செயல்" எனக் கண்டித்ததுடன், சகோதரனுக்கு ராக்கி கட்டும்போது இதுபோன்ற ஆடைகளை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்த கிருதி, "பெண்கள் என்ன அணிய வேண்டும் என்று சொல்வதை எப்போது நிறுத்தப் போகிறோம்? பாரம்பரியம் என்பது ஒரு பெண்ணின் இதயத்தில் உள்ளது, அவள் கழுத்திலோ அல்லது ஆடையிலோ இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.
நாய்க்கு ராக்கி கட்டியது குறித்துப் பேசிய அவர், "எங்களைப் பொறுத்தவரை இந்தப் பிரார்த்தனையும் வாக்குறுதியும் எங்கள் நாய்களுக்கும் பொருந்தும். அவையும் எங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமே" என்று தனது முடிவை நியாயப்படுத்தினார். சமீபத்தில் 'காக்டெய்ல் 2' மற்றும் 'தேரே இஷ்க் மே' ஆகிய படங்களில் நடித்த கிருதி சனோனின் இந்த விளக்கம், சமூக ஊடகங்களில் தற்போது கூடுதல் விவாதப் பொருளாக மாறியுள்ளது.