தனுஷ் கொடுத்த பரிசில் 'தாமரை' சின்னம்... பின்னணியில் பாஜக? சர்ச்சையும் விவாதமும்!
சென்னை செம்மஞ்சேரியில் நடைபெற்ற தனது நற்பணி இயக்க மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பில், நடிகர் தனுஷ் வழங்கிய பரிசில் 'தாமரை' சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில், பங்கேற்ற சுமார் 3,000 பெண் நிர்வாகிகளுக்கு தலா 20 கிராம் எடையுள்ள வெள்ளி காமாட்சி விளக்குகள் பரிசாக வழங்கப்பட்டன.
இந்நிலையில், அந்த வெள்ளி விளக்குகளின் அடிப்பகுதியில் பாஜகவின் தேர்தல் சின்னமான 'தாமரை' பொறிக்கப்பட்டிருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சமீபத்தில் நடிகர் தனுஷ் டெல்லிக்குச் சென்று முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்துவிட்டுச் சென்னை திரும்பியதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அவர் கலந்துகொண்ட முதல் மகளிரணி நிகழ்ச்சியிலேயே தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட பரிசுப் பொருள் வழங்கப்பட்டுள்ளது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
தனுஷின் இந்த திடீர் அரசியல் சார்ந்த நகர்வுகளின் பின்னணியில் பாஜக உள்ளதா என்ற கேள்விகளையும், எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்தான காரசாரமான விவாதங்களையும் இது அரசியல் விமர்சகர்களிடையே எழுப்பியுள்ளது.