தாராபுரம் இடைத்தேர்தல்... திமுக நிர்வாகியிடம் ரூ.7.6 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கம் பறிமுதல்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி, தேர்தல் பறக்கும் படை மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுக நிர்வாகியிடமிருந்து கணக்கில்வராத ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் மற்றும் நாம் தமிழர் கட்சிகள் களமிறங்குவதால் 5 முனைப் போட்டி நிலவுகிறது. தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் லட்சுமணன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தாராபுரம் தொகுதிக்குட்பட்ட மூலனூர் காவல் நிலைய எல்லைக்குள் தேர்தல் சோதனையின்போது, மூலனூரைச் சேர்ந்த செல்வராஜ் (57) என்பவரிடமிருந்து ரூ.7,63,400 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் திமுகவின் மூலனூர் நகர் 6-வது வார்டு செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக விஸ்வநாதன் என்பவரிடமிருந்து ரூ.40.79 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. ஃபைனான்ஸ் நடத்தி வரும் அந்த விஸ்வநாதன், திமுகவின் மூலனூர் பேரூர் கழக அவைத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. தாராபுரம் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதற்காகவே இந்தத் தொகை பதுக்கி வைக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.