தினகரன், தினமலர் நிருபர்களை அறையில் அடைத்து வைத்து தவெக எம்.எல்.ஏ. தம்பி கொலைவெறித் தாக்குதல்!
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் செய்தி சேகரிக்கச் சென்ற நாளிதழ் நிருபர்கள் மற்றும் யூடியூபரை பூட்டி வைத்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சோளிங்கரில் 'ஜனநாயகன்' திரைப்படம் குறித்து மக்களிடம் விமர்சனம் கேட்டுக்கொண்டிருந்த யூடியூபர் சிவாவை, தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ கபில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீரென ஸ்டூடியோவிற்குள் அழைத்துச் சென்று சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்தைப் படம் பிடித்து செய்தி சேகரிக்க முயன்ற 'தினகரன்' நாளிதழ் நிருபர் அரங்கநாதன் மற்றும் 'தினமலர்' நாளிதழ் நிருபர் கல்யாணசுந்தரம் ஆகிய இருவரையும் எம்.எல்.ஏ கபில், அவரது தம்பி தனஞ்செழியன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் சேர்ந்துகொண்டு கடையின் உள்ளே வலுக்கட்டாயமாக அடைத்தனர்.
அறையில் அடைத்து வைக்கப்பட்ட நிருபர்களைக் கொடூரமாகத் தாக்கிய கும்பல், அவர்களின் செல்போன்களில் பதிவு செய்யப்பட்டிருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வலுக்கட்டாயமாக அழித்துள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த யூடியூபர் சிவா மற்றும் நிருபர்கள் அரங்கநாதன், கல்யாணசுந்தரம் ஆகிய மூவரும் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த அத்துமீறல் சம்பவத்திற்குக் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.