வரி செலுத்துவதிலும் ‘தல’ தான் டாப்... ஜார்கண்ட் மற்றும் பீகாரில் அதிக வருமான வரி செலுத்தி தோனி சாதனை!

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, களத்தில் மட்டுமல்லாமல் வரி செலுத்துவதிலும் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளார். 2025-26 நிதி ஆண்டில் ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களிலேயே அதிக வருமான வரி செலுத்திய தனிநபர் என்ற பெருமையை அவர் மீண்டும் ஒருமுறை பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆன பின்னரும், அவரது வருமானம் மற்றும் வணிக ரீதியான செல்வாக்கு குறையாமல் இருப்பதை இது காட்டுகிறது.

ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் இருந்து கடந்த நிதி ஆண்டில் மொத்தம் 20,000 கோடி ரூபாய் வருமான வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை முதன்மை ஆணையர் டாக்டர் சுதாகர ராவ் தெரிவித்துள்ளார். இதில் ஜார்கண்ட் மாநிலம் மட்டும் 12,000 கோடி ரூபாய் பங்களிப்பை வழங்கியுள்ளது. மொத்த வரி வசூலில் சுமார் 70 சதவீதம் டி.டி.எஸ் (TDS) மூலம் கிடைத்துள்ள நிலையில், தனிநபர் வரி செலுத்துவோர் பட்டியலில் தோனி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

தோனி எவ்வளவு வரி செலுத்தினார் என்ற துல்லியமான விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை என்றாலும், ஜார்கண்ட் மற்றும் பீகார் ஆகிய இரு மாநிலங்களிலும் அவரே 'நம்பர் 1' தனிநபர் வரி செலுத்துவோர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்களைப் பொறுத்தவரை, சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (CCL) மற்றும் பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் (BCCL) போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் அதிக வரி செலுத்தியுள்ளன. கிரிக்கெட் வீரராக மட்டுமன்றி, ஒரு நேர்மையான வரி செலுத்துவோராகவும் தோனி திகழ்வது அவரது ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.