துரைமுருகன் விரக்தியில் அண்ணா அறிவாலயத்தில் இருந்து கிளம்பினாரா? திமுக விளக்கம்!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவாலயத்திற்கு வருவதற்கு முன்பாகவே திட்டமிட்டபடி கூட்டம் தொடங்கிவிட்டது.
இந்நிலையில், சற்று தாமதமாக வந்த பொதுச்செயலாளர் துரைமுருகனை வரவேற்க மகளிர் அணியினர் உட்பட யாருமே கடையின் வெளியில் வரவில்லை என்றும், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளே இருந்த நிலையில், துரைமுருகன் விரக்தியுடனும் சோகமான முகத்துடனும் கூட்டத்தில் பங்கேற்காமல் பாதியிலேயே காரில் ஏறித் திரும்பிச் சென்றார் என்றும் செய்தி ஊடகங்கள், சமூக வலைதளங்களில் செய்திகள் காட்டுத்தீயாய் பரவி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
ஊடகங்களில் பரவிய இந்த வதந்திகளை முற்றிலுமாக மறுத்துத் திமுக தகவல் தொழில்நுட்ப அணி அதிகாரபூர்வ விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதில், "கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் குறித்துச் சில செய்தி ஊடகங்களில் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் முற்றிலும் உண்மைக்கு முரணான அவதூறு செய்திகளுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மருத்துவர்களின் தீவிர அறிவுறுத்தலின் பேரில், தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க அதிக மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைக் கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் தற்போது தவிர்த்து வருகிறார். இதன் அடிப்படையிலேயே, தலைமைக் கழகத்திற்கு வருகை தந்த அவர், அலுவலகப் பணிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை மட்டும் பார்வையிட்டுவிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரம் குறித்துப் பொதுச்செயலாளர் துரைமுருகன் நேரடியாகத் தகுந்த விளக்கம் அளித்துள்ளார். அதில், "அறிவாலயத்தில் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்த காரணத்தினால், வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாகத் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் மட்டுமே மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் திரும்பிவிட்டேன்; இதில் வேறு எந்தவொரு காரணமும் இல்லை" என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.
நடைபெறாத ஒரு விஷயத்தைத் தாங்களாகவே இட்டுக்கட்டி, வீடியோக்களை வெட்டி ஒட்டி பொய்க் கதைகளை செய்தியாக வெளியிடும் ஊடகங்களின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும், இத்தகைய உண்மைக்குப் புறம்பான செயல்களை ஊடகங்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் திமுக தலைமை எச்சரித்துள்ளது.