“ரூ.4 கோடிக்கு வீடு வாங்கினேனா? பத்திரத்தைக் காட்டினால் அந்த வீட்டையே பரிசளிப்பேன்” - அமைச்சர் கீர்த்தனா சவால்!

 

சிவகாசியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில், தான் ரூ.4 கோடி செலவில் வீடு வாங்கியதாக எழும் அரசியல் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்குத் தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா காட்டமாகப் பதிலளித்துச் சவால் விடுத்துள்ளார்.

“நான் ரூ.4 கோடிக்கு வீடு வாங்கியிருப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். அப்படி ஒரு வீடு வாங்கியதற்கான பத்திரத்தை யாராவது கொண்டு வந்து ஆதாரத்துடன் காட்டினால், அந்த வீட்டை அவர்களுக்கே பரிசாக எழுதித் தந்துவிடுகிறேன்” என அமைச்சர் கீர்த்தனா சவால் விடுத்தார்.

“மக்களுக்கு யார் நல்லது செய்கிறார்கள், யார் கெட்டது செய்கிறார்கள் என்பது நன்றாகத் தெரியும். எதிர்க்கட்சியினர் தேவையில்லாமல் பொய்களைப் பரப்பி எங்களை எரிக்கப் பார்க்கிறார்கள். ஆனால், மக்கள் உண்மையை உணர்ந்தே இருக்கிறார்கள்” என்றார்.

கூட்டத்தில் பங்கேற்ற பெண்களிடம் உரையாற்றிய அவர், “அறியாமையில் இருக்கும் சிலருக்கு அரசியல் உண்மைகளை நீங்கள் தான் கொண்டு சேர்க்க வேண்டும். அந்தப் பொறுப்பை நமது த.வெ.க. தலைவர் விஜய் உங்கள் ஒவ்வொருவரிடமும் கொடுத்துள்ளார்” என்று குறிப்பிட்டார்.