இம்ரான் கான் சிறையிலேயே மரணமா? -  பாகிஸ்தான் ராணுவத்தின் விளக்கம்!

 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (73) சிறையிலேயே உயிரிழந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவிய நிலையில், அது முற்றிலும் பொய் செய்தி எனப் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் சிறைத்துறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் வெளியிட்ட காணொலி ஒன்றில், பாகிஸ்தான் ராணுவ மூத்த அதிகாரிகள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் இம்ரான் கான் சிறையில் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறியது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வஜாஹத் சயீத் கான் மீண்டும் ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், இம்ரான் கான் இறந்து விட்டார் என்பதற்குத் தன்னிடம் எவ்வித அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லை என்றும், ராணுவ வட்டாரங்களில் நிலவிய அச்சம் மற்றும் வதந்திகள் குறித்தே தான் பேசியதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இம்ரான் கான் உயிரிழந்துவிட்டதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், அவர் உயிருடன் பாதுகாப்புடன் இருக்கிறார் என்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் ISPR பிரிவு தெரிவித்துள்ளது.

ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான், நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.