"காவல்துறையினர் தாக்கியதால் பூசாரி உயிரிழப்பா?"... மதுரையில் பதற்றம் - காவல்துறை விளக்கம்!
மதுரையில் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் பூசாரி பரமசிவம் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் காவல்துறையினர் தாக்கி உயிரிழக்கவில்லை என மதுரை மாநகரக் காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த கோவில் பூசாரி பரமசிவம், அண்டை வீட்டாருடன் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட மோதல் காரணமாகக் கடந்த ஜூலை 19-ஆம் தேதி சிந்தாமணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காவல் நிலையத்தில் வைத்து அவரை போலீசார் கொடூரமாகத் தாக்கியதால் தலைவலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இறப்பதற்கு முன்பாக பரமசிவம் வெளியிட்ட வீடியோவில், காவல்துறையினர் தம்மைத் தாக்கியதே தனது உடல்நலக் குறைவுக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார். அவரது மனைவி மற்றும் மகன் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள காவல்துறையினர், பரமசிவம் ஜூலை 26-ஆம் தேதி தனது வீட்டில் தவறி கீழே விழுந்ததாலேயே காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியும் அதை மறுத்து அவர் வீட்டிற்குச் சென்றதாகவும், பின்னர் ஆகஸ்ட் 16-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளனர். இருப்பினும், இச்சம்பவத்தில் காவல் நிலையச் சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என்றும், உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.