“உங்க சுயநலத்துக்காக தமிழக உரிமைகளைத் தாரைவார்க்கத்தான் ஆட்சிக்கு வந்தீங்களா?” - எடப்பாடி ஆவேசம்!

 

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசின் இரண்டு இடையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதைச் சுட்டிக்காட்டி, “உங்கள் சுயநலத்திற்காகத் தமிழக உரிமைகளைத் தாரைவார்க்கத்தான் ஆட்சிக்கு வந்தீர்களோ?” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் விஜய்க்குக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு தாக்கல் செய்த இரண்டு இடையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் ஒரே வார்த்தையில் “Dismissed” எனக் கூறித் தள்ளுபடி செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பதே இன்றைய முதல்வருக்கு தெரியாது என்பதால், தீர்ப்பின் சில பக்கங்களைத் தமது பதிவில் இணைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், “இந்த அவமானம் ‘வெற்றி’ மாடல் புத்தகத்தின் எந்தப் பக்கத்தில் வரப்போகிறது?” என வினவியுள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல் இருப்பதாகவும், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியிடம் காவிரி குறித்துப் பேசாமல் இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தையும் அரசு முறையாக நடத்தவில்லை என அவர் சாடியுள்ளார்.

தமிழகத்திற்கு நேரெதிராகப் பேசி வரும் கர்நாடக முதலமைச்சரை ஒரு வார்த்தை கூடக் கண்டிக்காமல், டெல்லியில் அவரோடு புகைப்படத்திற்குப் போஸ் கொடுப்பதாக முதல்வர் விஜயை அவர் விமர்சித்துள்ளார்.

கடந்த ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க முடியாமல் ஏற்கெனவே குறுவை சாகுபடி வீணாகிப் போனதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, தற்போதும் கர்நாடக அரசு உரிய நீரை வழங்காததாலும், தமிழகத்திற்கு உரிமையான நீரைப் பெறத் தவறிய தவெக கூட்டணி அரசாலும் விவசாயிகளுக்குத் தண்ணீர் வந்து சேராமல் சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் தமது தலைமையிலான அதிமுக ஆட்சியில் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு காவிரி உரிமை பெறப்பட்டதாகவும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க 22 நாட்கள் நாடாளுமன்றத்தையே முடக்கித் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியதாகவும் அவர் நினைவூட்டியுள்ளார்.

எப்போதும் “எனக்கு எதிராகச் சதி செய்கிறார்கள்” என்று கூறுவதை விடுத்து, தமிழகத்தின் ஜீவாதார உரிமையோடும் விவசாய மக்களின் வாழ்க்கையோடும் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமது பதிவின் இறுதியில், “நீர் இன்றி நெல் இல்லை; நெல் இன்றி குடி இல்லை; குடி இல்லையேல் கோன் எதற்கு? என்று கேட்கும் நிலைக்குத் தள்ளிவிடாதீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.