வெயிட்டா கவனிச்சுட்டாங்களோ? ஒரே நாளில் 'என்ரிகா' நிறுவன மதுபானங்கள் மீதான தடையை நீக்கியது டாஸ்மாக்!
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் இயங்கி வரும் என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிக்கும் 11 வகையான மதுபானங்களை விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடையை, உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் டாஸ்மாக் நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மேற்கொண்ட ஆய்வில், என்ரிகா நிறுவனத்தின் தயாரிப்புகளில் விதிமுறைகளுக்கு மாறாக லேபிளிங் குளறுபடிகள் இருந்ததாகவும், இயற்கை மற்றும் செயற்கைச் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருந்ததாகவும் கண்டறியப்பட்டது. இதனடிப்படையில் ஆகஸ்ட் 13 ம் தேதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரின் அறிவுறுத்தலின் பேரில், டாஸ்மாக் கிடங்குகளில் இருந்து சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்களுக்கு (FL2, FL3) 11 மதுபான வகைகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்த டாஸ்மாக் மேலாண்மை உத்தரவிட்டது.
என்ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம், விஎஸ்ஓபி எக்ஸ்ஷா கோல்ட் பிராந்தி, லூயிஸ் வெர்னன்ட் எக்ஸ்ஓ பிளண்டட் பிரீமியம் பிராந்தி, மெக்டொவல்ஸ் விஎஸ்ஓபி பிராந்தி, நம்பர் 1 மெக்டொவல்ஸ் ஃபைன் பிராந்தி, என்ரிகா விஎஸ்ஓபி செலக்ட் பிராந்தி, என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்ஓ பிராந்தி, என்ரிகா பிரீமியம் பிரெஞ்ச் பிராந்தி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி, ஹனி பீ ஃபைன் பிராந்தி, மென்ஸ் கிளப் டீலக்ஸ் பிராந்தி ஆகியவற்றுக்கு தடை விதித்திருந்தது.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006, பிரிவு 36(3)(b)-ன் கீழ் முந்தைய தடை உத்தரவை FSSAI தெற்கு மண்டல அலுவலகம் திரும்பப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்தது.
FSSAI அளித்த புதிய விளக்கக் கடிதத்தின் அடிப்படையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையர் ஆர். கஜலட்சுமியின் வழிகாட்டுதலின்படி, 11 மதுபான வகைகளின் மீதான தடையை நீக்கி டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு ஆணையத்தால் தடை விதிக்கப்பட்டு ஒரே நாளில் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்தையும் சமூக வலைத்தளங்களில் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.