பாசப் போராட்டம்... தந்தையைக் கண்டதும் உருண்டு வந்த மாற்றுத்திறனாளி குழந்தை... நெகிழ்ச்சி வீடியோ!
இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியாகியுள்ள தந்தை மற்றும் மகனின் பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இரண்டு கால்களும் ஒரு கையும் இல்லாத ஒரு பிஞ்சு குழந்தை, தனது தந்தையைப் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் அவரை நோக்கி நகர்ந்து செல்கிறது. இருவருக்கும் இடையேயான எல்லையற்ற அன்பை வெளிப்படுத்தும் இந்தக் காட்சியை பார்த்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
வீட்டின் கதவுக்குப் பின்னால் தந்தை நிற்க, தரையில் படுத்திருக்கும் குழந்தை அவருடன் விளையாடும் காட்சிகள் இந்த காணொளியில் இடம்பெற்றுள்ளன. தந்தை வந்திருப்பதை அறிந்ததும், ஒரே கையைப் பயன்படுத்தி தரையில் உருண்டபடி கதவை நோக்கி அந்த குழந்தை உற்சாகமாக செல்கிறது. மழலைக் குரலில் தந்தையை அழைத்தபடி அது காட்டும் மகிழ்ச்சி காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த வைரல் காணொளி இதுவரை 17.6 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும், 1.5 கோடிக்கும் அதிகமான விருப்பங்களும் இந்த பதிவிற்கு குவிந்துள்ளன. 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கருத்துகளைப் பதிவிட்டு, குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.