டிரைவிங் லைசென்ஸ், RC இனி டிஜிட்டல் மட்டுமா?  2வாரத்தில் பதில் கொடுங்க... தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்!

 

 

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC) ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் மட்டுமே வழங்கும் நடைமுறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு 2 வாரங்களில் விரிவான பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் பொதுமக்களே பதிவிறக்கம் செய்து கொள்ளும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 முதல் இந்த வசதி அமல்படுத்தப்படும் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்துத் துறையின் உத்தரவின்படி செப்டம்பர் 12 முதல் பழைய முறையில் அச்சிடப்பட்ட கார்டுகளை வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டது.

இந்த முடிவை எதிர்த்து, பாதுகாப்பு அட்டைகள் அச்சிட்டு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெங்களூரைச் சேர்ந்த ஃபோர்ஸ் ஐடென்டிபிகேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.மனுதாரர் தரப்பில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கு உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என வாதிடப்பட்டது. ஸ்மார்ட்போன் வசதி இல்லாதவர்களுக்கும் டிஜிட்டல் ஆவணங்களைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், வழக்கு முடியும் வரை பழைய கார்டு வடிவிலான சான்றிதழ்களை வழங்கும் முறையையும் தொடர உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

அரசுத் தரப்பில், டிஜிட்டல் ஆவணங்களை இ-சேவை மையங்கள் உள்ளிட்ட வழிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் ஆவணங்களில் QR குறியீடு இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த முறையின் மூலம் ஆவணங்களை விரைவாகப் பெற முடியும் எனவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு, தமிழக அரசு மற்றும் போக்குவரத்து ஆணையர் தரப்பில் விரிவான பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.அதேநேரத்தில், டிஜிட்டல் முறைக்கு தற்போது உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கவில்லை. எனவே, வழக்கு நிலுவையில் இருப்பதால் பழைய கார்டு முறையை உடனடியாக மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.தற்போதைய நடைமுறையின்படி, டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் மற்றும் RC ஆகியவற்றை தொடர்புடைய ஆன்லைன் தளங்கள் மற்றும் DigiLocker, mParivahan போன்ற செயலிகள் மூலம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வசதி உள்ளது.