டிஜிட்டல் மோசடிகளுக்கு செக்... ஆர்பிஐ-யின் புதிய ’கில் ஸ்விட்ச்’ திட்டம்!
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இணையவழி நிதி மோசடிகளைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வங்கிக் கணக்குகள் மற்றும் டிஜிட்டல் வாலட்களின் பணப்பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்களே உடனடியாக முடக்கும் அவசரகால கில் ஸ்விட்ச் வசதியை அறிமுகம் செய்ய ஆர்பிஐ தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. ஆன்லைன் மோசடிகளில் இருந்து பொதுமக்கள் தங்களின் பணத்தைப் பாதுகாத்துக் கொள்ள இந்த அம்சம் பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய பாதுகாப்பு அம்சத்தின் மூலமாகப் பயனர்கள் தங்களின் வங்கிக் கணக்கு சார்ந்த முக்கிய சேவைகளைத் தாங்களாகவே கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக UPI, IMPS, NEFT மற்றும் இணைய வங்கிச் சேவைகளை மொபைல் செயலி அல்லது குறுஞ்செய்தி மூலமாக மிக எளிதாகச் செயல்படுத்தவோ அல்லது தற்காலிகமாக நிறுத்தவோ முடியும். ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் நடந்தால் உடனடியாக இந்த வசதியைப் பயன்படுத்திப் பணப் பரிமாற்றங்களை வாடிக்கையாளர்களே முடக்கிவிடலாம்.
தற்போதுள்ள சூழலில் ஆன்லைன் பண மோசடி நடந்தால் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு கணக்கை முடக்குவதற்குள் பெரும் தொகை திருடப்பட்டு விடுகிறது. ஆனால் இந்த புதிய இணைய பாதுகாப்பு வசதி பயன்பாட்டிற்கு வரும்போது வாடிக்கையாளர்கள் உடனடியாகச் செயல்பட்டுத் தங்களின் கணக்குகளைத் தாங்களே நொடியில் முடக்க முடியும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த அவசரகால வசதி விரைவில் அனைத்து வங்கிகளிலும் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிகிறது.