பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறு: திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் கொடூரக் கொலை; 3 பேர் கைது!

 

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பான தகராறில் திமுக பிரமுகர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் திமுக பிரமுகராக இருந்து வந்தார். இவருக்கும் சிலருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாகப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், 3 பேர் கொண்ட கும்பல் லட்சுமணனைத் தாக்கி, தலையில் பலத்த காயம் ஏற்படுத்திக் கொலை செய்ததாகத் தெரிகிறது.

இதற்கு முன்னதாக லட்சுமணனின் மகனைத் தாக்க அந்தக் கும்பல் முயன்றதாகவும், அது முடியாமல் போனதால் லட்சுமணனைத் தாக்கியதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, பிச்சைமுத்து, வாசு, ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரைக் கைது செய்துள்ளனர். கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.