திண்டுக்கல்லில் சோகம்: கார்த்திகை தீபம் ஏற்றியபோது புடவையில் தீப்பற்றி மூதாட்டி பலி!

 

  திண்டுக்கல் நகரப் பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி மீனாட்சி, திருக்கார்த்திகை திருநாளையொட்டி வீட்டில் தீபம் ஏற்றியபோது எதிர்பாராதவிதமாக அவரது புடவையில் தீப்பற்றி உயிரிழந்துள்ளார். அவரது மகன் சென்னையில் வசித்து வரும் நிலையில், மீனாட்சி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

நேற்று இரவு விளக்கேற்றியபோது ஏற்பட்ட இந்த விபத்தில், வீட்டில் வேறு யாரும் இல்லாததால் தீயை அணைக்கவோ உதவிக்கு யாரையும் அழைக்கவோ முடியாமல் அவர் தவித்துள்ளார். தீ வேகமாகப் பரவியதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று காலை வீட்டு வேலைக்கு வந்த பணிப்பெண், மூதாட்டி சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து சத்தமிட்டுள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மற்றும் சென்னையில் உள்ள மகனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.மகன் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த திண்டுக்கல் போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.