விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாள்...  கிடுகிடுவென  உயர்ந்த பூக்கள், பழங்கள் விலை! 

 

 

விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாள் காரணமாக திண்டுக்கல் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.விழாக்கால தேவையும், முகூர்த்த நாட்களுக்கான பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.500-ல் இருந்து ரூ.1,300 முதல் ரூ.1,500 வரை விலை உயர்ந்துள்ளது. முல்லைப்பூ ரூ.400-ல் இருந்து ரூ.1,000 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல், ரோஜா பூ ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆகவும், செவ்வந்தி பூ ரூ.100-ல் இருந்து ரூ.400 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

பூக்களின் விலை மட்டுமின்றி, விழாக்கால தேவையால் பழங்களின் விலையும் அதிகரித்துள்ளது. ஆப்பிள், மாதுளை, வாழைப்பழம், திராட்சை உள்ளிட்ட பழங்களின் விலை கிலோவுக்கு சுமார் ரூ.50 முதல் ரூ.100 வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நிகழ்ச்சிகளுக்காக பூக்கள் மற்றும் பழங்கள் வாங்கும் பொதுமக்கள் கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.