மின்கம்பியில் உரசிய வைக்கோல் லாரி! தீயில் சிக்கி 17 வயது சிறுவன் பலி !
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே மின்கம்பியில் வைக்கோல் லாரி உரசியதில் ஏற்பட்ட தீ விபத்தில், 17 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சாணார்பட்டி அருகே மார்க்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசன், தஞ்சை மாவட்டத்தில் இருந்து வைக்கோல் ஏற்றி வந்து சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்தார். சம்பவத்தன்று தனது மகன் பெரிய கருப்பனையும் (17) அழைத்துச் சென்றிருந்தார்.
வைக்கோல் விற்பனை முடிந்த பின்னர், லாரியின் மேல் போடப்பட்டிருந்த தார்ப்பாயை அகற்றுவதற்காக பெரிய கருப்பன் லாரி மீது ஏறியுள்ளார். அப்போது லாரியின் மீது சென்ற மின்சாரக் கம்பி, லாரியில் இருந்த வைக்கோல் மீது உரசியதாக கூறப்படுகிறது.இதையடுத்து வைக்கோலில் திடீரென தீப்பற்றி, சிறிது நேரத்தில் லாரி முழுவதும் தீ பரவியது. தார்ப்பாயை அகற்றிக் கொண்டிருந்த பெரிய கருப்பன் தீயில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் சிறுவனின் உடல் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.