ஐசியூவில் இயக்குநர் பாரதிராஜா.. .நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி! 

 

கடந்த சில நாட்களாக வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பாதிப்புகளால் ஓய்வில் இருந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனை வட்டாரங்கள் மற்றும் குடும்பத்தினர் தரப்பிலிருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி, அவருக்குக் கடுமையான நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் 24 மணி நேரத் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவருக்குச் செயற்கை சுவாசக் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

மருத்துவமனை படுக்கையில் பாரதிராஜா மிகவும் சோர்வாக இருக்கும் புகைப்படம் ஒன்று இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள், "எங்கள் இமயம் மீண்டு வர வேண்டும்" என உருக்கமாகப் பதிவிட்டு வருகின்றனர். 'மண்வாசனை' மாறாத படங்களைக் கொடுத்த கலைஞர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

பாரதிராஜா அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்தவுடன்,  இயக்குநர்கள் மணிரத்னம், பாக்கியராஜ் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் பாரதிராஜாவின் தம்பியிடம் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்து வருகின்றனர். வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், பாரதிராஜாவின் உடல்நிலை  சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.