பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் பணி ஓய்வு; லதாவிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கி அரசு ஆணை!
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை இயக்குநராகப் பணியாற்றி வந்த முனைவர் ச. கண்ணப்பன் வயது முதிர்வு காரணமாகப் பணிக்காலத்தை நிறைவு செய்து ஓய்வு பெற்றுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் க. அன்பழகன் கல்வி வளாகத்தில் இயங்கி வரும் பள்ளிக் கல்வி இயக்ககத்தில் பணியாற்றி வந்த அவருக்கு, பள்ளிக் கல்வித் துறை சார்பில் வாழ்த்துகளும் நன்றியும் தெரிவிக்கப்பட்டன. கண்ணப்பனின் ஓய்வைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறையின் நிர்வாக நலன் கருதி புதிய ஏற்பாட்டைத் தமிழக அரசு செய்துள்ளது.
தற்போது மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராகப் பணியாற்றி வரும் திருமதி ந. லதா அவர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பணியிடத்திற்கான முழு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. புதிய இயக்குநர் நியமிக்கப்படும் வரை லதா இந்தப் பொறுப்புகளைக் கவனிப்பார்.