வாக்களிக்கச் சென்ற இயக்குநர் சாலை விபத்தில் பலி , மனைவி, மகன் படுகாயம்!

 

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஜெயபாலன், சென்னையில் தங்கி 'பந்து' என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற விரும்பிய அவர், சொந்த ஊருக்குச் செல்ல பேருந்தில் இடம் கிடைக்காததால் தனது இருசக்கர வாகனத்திலேயே பயணிக்க முடிவெடுத்தார். தனது 35 வயது மனைவி மற்றும் 7 வயது மகனுடன் கடந்த 22-ம் தேதி அதிகாலை சென்னையில் இருந்து புறப்பட்டு ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

நீண்ட தூரப் பயணத்தின் இடையில் 23-ம் தேதி அதிகாலை நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளம் சாலையில் சற்று ஓய்வு எடுப்பதற்காக அவர்கள் ஓரமாக நின்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே அதிவேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட 45 வயது இயக்குநர் ஜெயபாலன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவரது மனைவியும் மகனும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சுமார் 600 கிலோமீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒரு கலைஞர், ஊர் வந்து சேரும் முன்பே விபத்தில் சிக்கி உயிரிழந்தது திரையுலகினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள நாங்குநேரி போலீசார் கார் ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயம் அடைந்த ஜெயபாலனின் குடும்பத்தினர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.